தஞ்சாவூர்,

தஞ்சாவூரில், கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாட அனுமதி வேண்டி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

“தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இந்த ஆண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே ஆட்சியர் இதில் தலையிட்டு சரபோஜி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சரபோஜி கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி விடுதி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாட அனுமதிக்ககோரி” அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் குருமூர்த்தி மற்றும் காவலாளர்கள் அங்கு விரைந்துச் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது “மாணவர்கள் அவர்கள் விடுதிகளில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடலாம்” என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மாணவர்களின் இந்த போராட்டத்தால் தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்புடன் காணப்பட்டது.