ரெடியாக இருந்த செய்தியாளர்கள்; 'எஸ்கேப்' ஆன விஜய்; இது அரசியல்வாதிக்கு அழகா? குவியும் கண்டனம்!
தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை தவிர்த்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இன்று ஆளுரை சந்தித்த விஜய் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்காமல் எஸ்கேப் ஆனார்.
தவெக தலைவர் விஜய்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி முடித்து விட்டார். இதன்பிறகு தமிழ்நாட்டில் ஆளும் திமுவையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் விஜய் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் விஜய், நேரடியாக களத்துக்கு செல்லாமல் வெறும் அறிக்கைகள், ட்வீட்கள் வாயிலாக அரசியலில் ஈடுபட்டு வருவது விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
நேரடியாக களத்தில் இல்லை
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கடலூர், திருவண்ணாமலை, மாவட்டங்களை பெஞ்சல் புயல் புரட்டிப்போட்டப்போது ஆளும் கட்சியான திமுக மட்டுமின்றி அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் களத்துக்கு சென்றனர். ஆனால் தவெக தலைவர் விஜய், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களை சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரண உதவி வழங்கியதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன.
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த விஜய்
இதேபோல் அரசியல் கட்சி தொடங்கி பல மாதங்கள் ஆகியும் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு திடீரென சென்ற விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.
செய்தியாளர்களை புறக்கணிப்பது ஏன்?
அப்போது விஜய்யிடம் பேட்டி எடுப்பதற்காக ஆளுநர் மாளிகை முன்பு ஏராளமான செய்தியாளர்கள் திரண்டனர். ஆனால் ஆளுநரிடம் மனு கொடுத்து விட்டு வெளியே வந்த விஜய், செய்தியாளர்களை பார்த்து கையசைத்து விட்டு பேட்டி அளிக்காமல் காரில் ஏறி சென்று விட்டார். இதனால் விஜய் பேட்டியளிப்பார் என காத்திருந்த செய்தியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அரசியல் விமர்சகர்கள் கண்டனம்
தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்காமல் தவிர்த்து வருவது அரசியல் விமர்சகர்களின் கண்டனத்தை பெற்றுள்ளது. ''தமிநாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, பாமக என அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். ஆனால் கட்சி ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும் விஜய் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இது ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு அழகல்ல'' என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
''செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதில் சொல்வது ஒரு அரசியல் கட்சி தலைவரின் கடமை மட்டுமின்றி பொறுப்பும் ஆகும். ஆனால் விஜய் தனது பொறுப்பை தட்டிக்கழிக்கிறார். 2026ம் ஆண்டு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று உறுதியாக செல்லும் விஜய், செய்தியாளர்களை கண்டு பயப்படுவது ஏன்? இனிமேலும் நேரடியாக அரசியல் களத்தில் இறங்காமல் ஒதுங்கிச் சென்றால் எப்படி மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்'' என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.