மாணவர்களின் கனவு இன்று நனவாகிறது….இதோ தொடங்குகிறது அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு…

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இதை தொடர்ந்து நடத்த நிரந்த சட்டம் தேவை என்ற மாணவர்களின் மாபெரும் போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து , உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று 8.30 மணியளவில் தொடங்க உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதியளிக்க வேண்டும், அதற்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அலங்காநல்லூரில் தெதாடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் தீயாய் பரவியது.

சென்னை மெரினாவில் நடைபெற்ற வரலாறு காணாத அறப்போராட்டத்தால்ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றப்பட்டு, அது நிரந்தரமாக்க ஒப்புதலும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8.30 மணியளவில் தொடங்குகிறது.

இதில் பங்கேற்க 1000 காளைகளும், 1500 மாடுபிடி வீரர்களும் தயார்நிலையில் உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சியாக செய்யப்பட்டு வருகின்றது.

போட்டியை மதுரை ஆட்சியர் நேரில் கண்காணிப்பார். மாடுபிடி வீரர்களுக்கு கார், புல்லர் பைக்குகள், சைக்கிள், தங்க காசு, வெள்ளிகாசு உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

முதல்முறையாக அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கப்பட உள்ளது.