கிராமப்புறங்களில் தொழில்நுட்ப ரீதியிலான இடைவெளியை குறைக்கும் வகையில் 4 ஜி சேவையை வழங்க இருப்பதாக பி.எஸ்.என்.எல்-ன் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சமீபத்தில் நடந்த அலைக்கற்றை ஏலத்தில், 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை மத்திய அரசு விலை நிர்ணயம் செய்தது. ஆனால், இந்த விலை மிகவும் அதிகம் என கூறிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அந்த அலைக்கற்றையை ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்த 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 5 மெகாஹெர்ட்ஸ் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி மத்திய தொலைத் தொடர்பு துறையிடம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஈடாக, மத்திய அரசு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பிரதமரின் டிஜிட்டல் திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கு, கூடுதல் அலைக்கற்றை தேவைப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் தொழில்நுட்ப ரீதியிலான இடைவெளியை வெகுவாக குறைக்க முடியும். அதே நேரத்தில், 4 ஜி சேவையையும் வழங்க முடியும்.

கடந்த 2013-14ம் நிதியாண்டில், நிறுவனத்தின் வருவாய் ரூ.691 கோடிக்கு குறைந்தது. அடுத்த நிதியாண்டில் ரூ.672 கோடியாக இருந்த வருவாய், 2015-16-ல் ரூ.3,855 (வட்டி வரி, தேய்மானம் முந்தைய) கோடியாக உயர்ந்துள்ளது. இவற்றை 2018-19 நிதியாண்டில் ரூ.4,500 கோடியாக அதிகரித்து, நிகர லாபத்தை பிஎஸ்என்எல் திரும்பப் பெறும். தற்போது தொலைத்தொடர்பு துறை கடும் போட்டி நிறைந்ததாகும்.

ரிலையன்ஸ் ஜியோ வருகை, ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் சவாலானதாகும். ஜியோ குறித்து அனைத்து தரப்பு மக்களும் பேசி வருவது குறித்து ஆராய்ந்த பின்பு, ரூ.149, ரூ.249 கட்டண திட்டங்களை அறிமுகம் செய்தோம்.

இந்தாண்டு (2016-17) நாடு முழுவதும் தொலைத்தொடர்பை விரிவுப்படுத்த ரூ.4,800 கோடி முதலீடு செய்ய இருக்கிறோம். மேலும் கண்ணாடி இழை (ஆப்டிகல் பைபர்) மூலம் அந்தமான், நிக்கோபார் பகுதிகளை இணைக்கவும், செல்போன் சேவையை மேம்படுத்தவும் கூடுதலாக ரூ.4,800 கோடியை மத்திய அரசின் சார்பாக முதலீடு செய்யவுள்ளோம். செல்போன் டவர்களை தயாரிக்கும் புதிய நிறுவனத்தை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளோம் என்றார்.