தூத்துக்குடி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா குழுவின் சாதகமான பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும், 

எட்டு மணி நேரம் பணி வழங்குதல் வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ஆம் தேதி முதல் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சேவியர்ராஜ் தலைமை தாங்கினார். செயலர் பிச்சையா, துணைச் செயலர் நாறும்பூநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சங்கத்தைச் சேர்ந்த ரமாதேவி, கந்தவேலம்மாள், செண்பகமுத்து, தினகரன், கிருஷ்ணசாமி, செல்வராஜ், ஜார்ஜ், சமுத்திரவேல், பட்டுராஜன், செளந்தரராஜன், கனகராஜ், காளிமுத்து, மாரியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கிராமிய அஞ்சல் ஊழியர்களின் இந்தப் போராட்டத்தால் தூத்துக்குடியில் 280  கிளை அஞ்சலகங்களில் 109  கிளை அஞ்சலகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், 613  ஊழியர்களில்  263 பேர்  நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.