கன்னியாகுமரி

அனைத்து மருத்துவமனைகளிலும், எல்லா நோய்களுக்கும் மருத்துவ காப்பீடு மூலம் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் சங்கத் தலைவர் செல்வராஜ், செயலர் ராஜாசிங் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம்  நேற்று மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில், "ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நடத்த வேண்டும். 

மருத்துவ உதவி, புதிய மருத்துவ காப்பீட்டுத்  திட்டம், ஓய்வூதியர்களுக்கு வருகிற ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து 2022 ஜூன் 30-ஆம் தேதி வரை 4 ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீடு ரூ. 5 இலட்சமாகவும், கேன்சர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ரூ. 7.5 இலட்சமாகவும் உயர்த்தவேண்டும். 

மருத்துவச் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு முழுமையான செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். 

மருத்துவமனைகளில் பேக்கேஜ் முறை ஒழிக்கப்படவேண்டும். 

நோய்கள், மற்றும் மருத்துவமனைகளுக்கான பட்டியலுக்கு மட்டுமே காப்பீடு பொருந்தும் என்றில்லாமல், அனைத்து மருத்துவமனைகளிலும், எல்லா நோய்க்கும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.