காஞ்சிபுரம்

போக்குவரத்து தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றோடு ஐந்தாவது நாளாக போராடி வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். பகுதிச் செயலாளர்கள் வேலன், சேஷாத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட 100–க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் முழக்கமிட்டு ஆதரவுக்கரம் நீட்டினர்.