திருச்சி,
அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் காவலாளிகளை கட்டாயம் நியமிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆய்வாளர் மஞ்சுநாதா அறிவுறுத்தினார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளின் மூலம் ஏற்படுத்தக் கூடிய விழிப்புணர்வு ஆகியவை குறித்து வங்கி அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று மாநகர காவல் ஆணையர் மஞ்சுநாதா தலைமையில் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு அரங்கில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆணையர் மஞ்சுநாதா வங்கி அதிகாரிகளிடையே கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியது:-
“வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணமற்ற பரிவர்த்தனைகளில் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதை பற்றி விழிப்புணர்வு பதாகைகள் வங்கிகளில் வைக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வங்கி அதிகாரிகள், காவலாளர்களுடன் இணைந்து துண்டு பிரசுரங்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து வங்கிகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படும் வகையில் பராமரிக்க வேண்டும்.
வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் இரகசிய குறியீட்டு எண்களை வங்கி அதிகாரிகள் உள்பட எந்த ஒரு நபருக்கும் தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ அல்லது “இ-மெயில்” மூலமாகவோ கேட்டாலும், வாடிக்கையாளர்கள் தெரியப்படுத்தக்கூடாது என்பதை வங்கி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் காவலாளிகளை கட்டாயம் நியமிக்க வேண்டும்”. என்று அவர் அறிவுறுத்தினார்.
இதில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகள், மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
