கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விடுவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தனியார் பள்ளியான கிருஷ்ணா பள்ளியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம், நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கும்பகோணம் பகுதி மக்கள் மனதில் நீங்காத வலியாகவும், வடுவாகவும் இந்த சம்பவம் பதிந்துள்ளது.

தீ விபத்து தொடர்பாக 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறையில் இருந்த காலத்தை, தண்டனை காலமாக கருதி அவர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், பள்ளி சமையற்காரரின் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.