ஏறுதழுவ தயாராகும் இளைஞர்கள்… அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் முன்பதிவு..

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்‍கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்‍கான முன்பதிவு மற்றும் மருத்துவ பரிசோதனையில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்‍கட்டுப் போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் நடைபெற்ற எழுச்சிமிகு போராட்டம் காரணமாக ,தமிழக சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்புமிக்‍க ஜல்லிக்‍கட்டு சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் ஜல்லிக்‍கட்டுக்‍கான தடை முற்றிலும் நீங்கியதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்‍கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 

அதன் ஒருபகுதியாக, பிரசித்திப் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்‍கட்டுப் போட்டி, நேற்று முன்தினம் வழக்‍கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்‍கினர். இதனை ஆயிரக்‍கணக்‍கான மக்‍கள் ஆரவாரத்துடன் உற்சாகமாகக்‍ கண்டுகளித்தனர்.

இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூரில், வரும் 10-ம் தேதி, ஜல்லிக்‍கட்டுப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக, ஜல்லிக்‍கட்டில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

தேனி, திண்டுக்‍கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏரளாமான இளைஞர்கள், ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்து நின்று மருத்துவ உடற்பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர்.