ஐஸ்வர்யா தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்று வழக்குப் பதிந்துள்ளது காவல்துறை. அதனைக் கண்டித்தும், ஐஸ்வர்யாவின் மரணத்தை கொலை வழக்காக மாற்றக்கோரியும் பெரம்பலூரில் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியத.

கொலைச் செய்யப்பட்ட ஐஸ்வர்யாவின் மரணத்தை “தற்கொலைக்கு தூண்டியதாக” காவலாளர்கள் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். இதனை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்,

ஐஸ்வர்யாவின் குடும்பத்தினருக்கு ரூ.50 இலட்சம் இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும்,

அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆதிதிராவிட இளம்பெண்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். மேலும், கட்சி தொண்டர்களிடம் இருந்து திரட்டிய நிதி ரூ.1 இலட்சத்து 37 ஆயிரத்து 200-ஐ ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் வழங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், திருச்சி மண்டல அமைப்பு செயலாளர் இரா.கிட்டு, மாநில பொறுப்பாளர் வீர.செங்கோலன், கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகிகள் செல்லதுரை, ஞானசேகரன், திராவிடர் கழகத்தை சேர்ந்த தங்கராசு மற்றும் பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அதை வீடியோ எடுக்க வந்த காவலாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் காவலாளர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

பின்னர், தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது:

“ஐஸ்வர்யா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் பங்கீடு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தொகை ரூ.7 ஆயிரம் கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய மறுப்பது மிகவும் வேதனை அளிக்கிறது” என்று அவர் கூறினார்.