கனமழை எதிரொலி.. மொத்தம் 20 விமானங்கள் ரத்து - இன்று இரவு வரை மூடப்படும் சென்னை விமான நிலையம்!
Chennai Airport Closed : சென்னையில் பெய்து வரும் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் ஆந்திர எல்லையில் நாளை டிசம்பர் 5ஆம் தேதி மிக்ஜாம் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதே நேரத்தில் வெதர்மேன் தற்பொழுது அறிவித்துள்ள தகவலின்படி படிப்படியாக தமிழகத்திலும் தலைநகர் சென்னையில் மழையின் அளவு குறையும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அவர் அளித்த தகவலின்படி அபாய கட்டத்தை தற்பொழுது தாண்டி வருகிறோம் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் பெரிய அளவில் இயக்கப்படாத நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 6 ரயில்களும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கோயம்புத்தூர், மைசூர் மற்றும் பெங்களூருவில் இருந்து வர வேண்டிய 5 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 47 ஆண்டுகளில் வரலாறு காணாத மழை: களத்தில் இறங்கும் திமுக ஐடி விங்!
மழையின் காரணமாக பல்வேறு போக்குவரத்து சிக்கல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓடுதளம் முழுவதும் தண்ணீர் குலமென தேங்கி நிற்பதால் இன்று மதியம் வரை சென்னை விமான நிலையம் மூடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கு தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்பதாலும் வானிலை முன்னறிவிப்பு காரணமாகவும் இன்று இரவு 11.00 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. சென்னை விமானநிலையத்தில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் தங்கள் விமான சேவை நிறுவனத்தினை அணுகி உரிய தகவல்களை பெற்று அதன் பின் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.