தஞ்சாவூர்

நான்கு ஆண்டுகளாக தராமல் இருக்கும் அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் சந்திரகுமார், மாநிலப் பொருளாளர் கோவிந்தராசன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றுப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

“மாநிலம் முழுவதும் 300 அமுதம் பல்பொருள் அங்காடிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் திறக்கவில்லை. இதனை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்னை மூலம் உற்பத்தி செய்யப்படும் “நீரா” பானத்தை மொத்த கொள்முதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

குறைந்தபட்ச சம்பளம் சட்டப்படி வழங்க வேண்டிய அகவிலைப்படியை நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஓய்வுப் பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் கால தாமதப்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே, விரைவாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரக் கட்டுப்பாடு பணியாளர்களுக்கு தரக் கட்டுப்பாடு பணியோடு நிர்வாக பணியையும் சேர்த்து பார்க்க வற்புறுத்தப்படுகிறது. இது பணி விதிகளுக்கு விரோதமானது என்பதால் ஆகஸ்டு மாதம் 1-ஆம் தேதி முதல் தரக் கட்டுப்பாடு பணிகளை மட்டும் மேற்கொள்வோம். நிர்வாக பணிகளை மேற்கொள்ள மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

நிர்வாக பணியாளர்களுக்கும், தரக் கட்டுப்பாடு பணியாளர்களுக்கும் ஒரே அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தரக்கட்டுப்பாடு பணியாளர்களுக்கு சம்பளம் குறைத்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை பரிசீலித்து சம அளவில் சம்பளம் வழங்க வேண்டும்” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில தலைவர் சாமிக்கண்ணு, மாநிலப் பொதுச் செயலாளர் புண்ணீஸ்வரன், இணைப் பொதுச் செயலாளர் குணசேகரன், மாநிலச் செயலாளர்கள் கோதண்டபாணி, சுப்பிரமணியன், அரசுப் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசு, வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் இறுதியில் மாவட்டப் பொருளாளர் தியாகராஜன் நன்றத் தெரிவித்தார்.