aictu siege in TN assembly

பிரிக்கால் ஆலை தொழிலாளர்களுக்கு சம்பளம் பிடித்ததை கண்டித்து, ஏஐடியுசி சங்கத்தினர் 300க்கு மேற்பட்டோர் சட்டமன்றத்தை முற்றுகையிட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்களை, போலீசார் கைது செய்தனர்.

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஏஐடியுசி சங்கத்தினர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பிரிக்கால் ஆலை ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதனால், அந்நிறுவனம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான 8 நாள் சம்பளத்தை பிடித்து கொண்டது.

இதுபற்றி பல்வேறு தொழிலாளர்கள் நல சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அரசுக்கும் இதுபற்றி, மனுக்கள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் இன்று சட்டமன்றம் கூடியது. அந்த நேரத்தில், எவ்வித அனுமதியும் இல்லாமல், காலையில் சட்டமன்றத்தை ஏஐடியுசி சங்கத்தினர் 300க்கு மேற்பட்டோர் திரண்டு முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து, வேனில் ஏற்றி சென்றனர். இதே நேரத்தில், கோவையில், பிரிக்கால் ஆலை நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.