அண்ணமலை தலைமையில் திருமணம்: அதிமுக நிர்வாகியை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி!
அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துார் ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராம் பள்ளி சார்பில் 39 ஜோடிகளுக்கு திருமணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளி ஏற்பாட்டின் பேரில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக பிரமுகர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
திருமண விழாவில் பேசிய அண்ணாமலை, இந்த ஜோடிகளின் திருமண நாளை இனிதாக மாற்றியதற்காக முரளி ரகுராம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாஜக சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். முரளி ரகுராம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார்.
ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், S. முரளி (எ) ரகுராமன், (விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாகவே பாஜக - அதிமுக இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜகவின் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையை வைத்து திருமணம் நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்தே எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கைகள் இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருவதை காட்டுவதாக இருக்கிறது என்கிறார்கள்.