இரண்டு நாளில் திருமண நிச்சயதார்த்தம்..! அதிமுக ஐடி விங் நிர்வாகி திடீர் கைது- போலீசாருடன் வாக்குவாதம்
முதல்வர் ஸ்டாலின் மீதான அவதூறு கருத்தை பதிவிட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகி அருண்குமாரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் காவல் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவதூறு பதிவு- அதிமுக நிர்வாகி கைது
தமிழகத்தில் மது விலை உயர்வு தொடர்பாக மதுப்பிரியர் ஒருவர் மதுபாட்டிலை தலையில் வைத்துக்கொண்டு சாலையில் செல்வதும், அவர் மதுபான விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் ஆபாச வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் இந்த வீடியோவை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி அருண்குமார் பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக திமுக வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் இன்று அதிகாலை அருண்குமாரை பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்நிலையத்தில் அதிமுகவினர் வாக்குவாதம்
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய பின்பு சிறையில் அடைத்தனர். இந்த கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவனர் பொள்ளாச்சி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது முன்னாள் துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
ஒரு வீடியோவை பார்வர்டு செய்ததற்காக கைது செய்யப்பட்டால் பார்வர்டு செய்த அணைவரையும் கைது செய்வீர்களா.? என கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அருண்குமாருக்கு இரண்டு நாட்களில் திருமணம் நிச்சயம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொய் வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தாக்குதல் எதுவும் தொடுக்காத நிலையில் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்கள்
பாஜகவோடு கூட்டணியை முறித்த கையோடு மாநில நிர்வாகியை அதிமுகவிற்கு தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி