இரட்டை இலை சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு: இபிஎஸ்சுக்கு எதிராக அமைய வாய்ப்பு?
இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
அதிமுகவில் ஏற்பட்ட உட் கட்சி பிரச்சினையால், அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருப்பதால் சட்டரீதியாகவும் கட்சி, சின்னம் ஆகியவை அவரிடம் சென்றுள்ளது. இதை நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், எடப்பாடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பல்வேறு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் அணையத்திற்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா அறிவித்துள்ளார். இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அதிமுகவில் பிரிந்துள்ள பலரையும் ஒன்றாக சேர்த்து எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டது. ஆனால், ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை இணைக்க மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். அவரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வரும் பாஜகவின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஓபிஎஸ் தரப்பு, பாஜகவுடன் கூடுதல் நெருக்கம் காட்டி வருகிறது.
மேலும், தங்கள் அணியின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து அழுத்தமாக கூறி வருகிறார். அதேசமயம், இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடுவோம் என்று அதிமுகவை மிரட்டி, கூட்டணிக்கு அழைப்பதாக பாஜக மீது அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற நிதி திமுக பெற்றதை விடவும் குறைவு தான் - அண்ணாமலை விளக்கம்
இந்த பின்னணியில், இரட்டை இலை சின்னம் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. நாளைதான் தேர்தல் அறிவிப்பும் வெளியாகவுள்ளது. அதற்கு பின்னர், தேர்தல் நடைமுறை மற்றும் சின்னம் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. ஒருவேளை, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இரட்டை இலை வழக்கின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக இருந்திருந்தால் நேற்று அல்லது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும்.
ஆனால், தேர்தல் தேதி அறிவிப்போடு நாளை தீர்ப்பு வரவுள்ளதால், அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமையவும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதனால், இந்த வழக்கின் மீதான தீர்ப்பு கவனம் ஈர்த்துள்ளது.