Asianet News TamilAsianet News Tamil

அம்மா ஸ்கூட்டர் திட்டத்தில் அதிமுக அரசு இப்படிதான் கொள்ளையடிக்குது - உண்மையை போட்டுடைத்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்...

AIADMK government is looting like this in amma scooter - EVKS ilangovan
AIADMK government is looting like this in amma scooter - EVKS ilangovan
Author
First Published Feb 14, 2018, 8:13 AM IST


ஈரோடு

ரூ.50 ஆயிரம் மதிப்புடைய ஸ்கூட்டரை ரூ.75 ஆயிரத்துக்கு விலையை உயர்த்தி ரூ.25 ஆயிரம் மானியம் கொடுப்பதாக அதிமுக அரசு கொள்ளையடிக்கிறது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் தெரிவித்தார்.

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம், பி.பி.அக்ரஹாரம் வண்டிப்பேட்டை பகுதியில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் முன்னிலை வகித்தார். மாநகரச் செயலாளர் மு.சுப்பிரமணியம் வரவேற்றார்.

இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியது: "தமிழகத்தில் பேருந்துகளின் கட்டணம் உயர்த்திருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் பிரச்சனையை கண்டுகொள்வதில்லை.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேருந்து கட்டணத்தை எவ்வாறு குறைக்கலாம்? என்ற ஆய்வு அறிக்கையை வழங்கி இருக்கிறார்.

அரசு போக்குவரத்துக் கழகத்தை இலாபகரமாக இயக்குவதற்கு அதில் உள்ள ஊழலை ஒழித்தாலே போதும். பேருந்து கட்டணம் பாதியாக குறைந்துவிடும்.

போக்குவரத்து துறையில் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தமிழக அமைச்சருக்கு இலஞ்சம் கொடுத்து பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு பொறுப்புக்கு வரும்போதே இலஞ்சம் கொடுப்பதால் அவர்கள் ஊழல் செய்கின்றனர்.

தமிழகத்தில் எங்குதான் இலஞ்சம் கிடையாது? ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் என எந்த அரசு அலுவலகங்களுக்கு சென்றாலும் ஊழல் மலிந்து கிடக்கிறது.

பல அமைச்சர்களுக்கு சொந்தமாக தனியார் பேருந்துகள் ஓடுகிறது. ஏன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமாக 14 தனியார் பேருந்துகள் உள்ளன. இது உண்மை. தைரியம் இருந்தால் அவர் என் மீது வழக்கு போட்டுக் கொள்ளட்டும்.

ஜெயலலிதா என் மீது போட்டுள்ள வழக்கை நான் தைரியமாக சந்தித்து வருகிறேன். எனவே, எந்த வழக்கையும் சந்திக்க தயார்.

அரசு போக்குவரத்துக்கழகம் நலிந்தால்தான் தனியார் பேருந்துகளை சிறப்பாக ஓட்ட முடியும் என்ற காரணத்தினால் மோசமாக நடத்தப்படுகிறது.

அம்மா ஸ்கூட்டருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய ஸ்கூட்டரை ரூ.75 ஆயிரத்துக்கு விலையை உயர்த்தி மானியம் கொடுப்பதாக கொள்ளையடிக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமிக்கும், எனக்கும் எவ்வித பிரச்சனையும் தனிப்பட்ட முறையில் இல்லை. நானே அவருக்கு ஓட்டு போட்டுள்ளேன். பாராளுமன்ற தேர்தலின்போது திருச்செங்கோடு தொகுதியில் காங்கிரசு கூட்டணியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டு போட்டேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது.

ஊழலை ஒழிக்க இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "ஊழல் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை தமிழக சட்டசபையில் திறந்து வைத்திருப்பது ஏற்புடையது அல்ல.

இது சரி என்றால் ரௌடிகள் படத்தையும் சட்டசபையில் திறந்திருக்க வேண்டும்.

சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்க ஆதரவு தெரிவித்த விஜயதரணி எம்.எல்.ஏ. மீது தமிழக காங்கிரசு கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios