அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஒன்லி வெஜ்... உணவுப் பட்டியல் இதுதான்!
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பரிமாறப்படவுள்ள உணவு பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக தலைமையை கைப்பற்ற நடந்த பல்வேறு முயற்சிகளில் தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி பக்கமே காற்று பலமாக வீசி வருகிறது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஓரங்கட்டியதோடு கட்சியிலிருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஓபிஎஸ், இபிஎஸ் என இரட்டை தலைமையில் செயல்பட்டு வந்த அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதுதொடர்பான சட்டப்போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும், இப்போதைக்கு கட்சி எடப்பாடி வசமே உள்ளது. நாளை எதுவும் நடக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும் கூட, நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு தேர்தல் மூலம் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்ட விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டமும், 2 முறை செயற்குழு கூட்டமும் நடத்த வேண்டும். அதன்படி, அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பாஜக அல்லாத கூட்டணியை அமைக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மக்களவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, கூட்டணி வியூகம், தொண்டர்கள் எப்படி களப்பணியாற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால், பிரமாண்ட முறையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய இசை நடனங்கள், பேண்டு, வாத்தியம், பூரண கும்ப மரியாதை என பல்வேறு வகையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 2800 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அறுசுவை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பரிமாறப்படவுள்ள உணவு பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தம்ப்ரூட் அல்வா, வெஜ் பிரியாணி, வெங்காயம் வெள்ளரி மாதுளை தயிர் பச்சடி, பருப்பு வடை, புடலங்காய் கூட்டு, கோஸ், பீன்ஸ், கேரட் பட்டாணி பொரியல், பால்கறி கூட்டு, உருளைக் கிழங்கு மசாலா, வெண்டைக்காய், மொச்சை மண்டி, வத்தக் குழம்பு, கத்தரிக்காய், முருங்கைக்காய், பீன்ஸ் சாம்பார், போண்டா மோர் குழம்பு, தக்காளி ரசம், தயிர், ஊறுகாய், அப்பளம், பருப்பு, நெய், மோர் மிளகாய், அடைப்பிரதமன் பாயாசம், வாழைப்பழம், ஐஸ்கிரீம், பீடா, வாட்டர் பாட்டில் ஆகியவை பரிமாறப்படவுள்ளன.
இன்று பவுர்ணமி என்பதால், அசைவ உணவு இல்லாமல் சைவ உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உணவு பட்டியலை தயார் செய்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.