தமிழகத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து திமுக அரசை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் மக்கள் உயிரைக் காப்பதில் அக்கறை காட்டாமல், விளம்பரங்களில் கவனம் செலுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, போதை பொருள் நடமாட்டம் இதையெல்லாம் தொடர்ந்து வந்தாலும் தற்பொழுது நாள் தவறாமல் சாலை விபத்துகள் நிகழ்வது மனித உயிர்கள் பலியாவதும் நமக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்துகிறது என அதிமுக கூறியுள்ளது. இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் ஸ்டாலின் திமுக ஆட்சியிலே எங்கு பார்த்தாலும் கருப்பு புள்ளிகள் ஏற்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம். 

தற்போது நம்முடைய கவலை எல்லாம் ஸ்டாலின் திமுக ஆட்சியிலே தமிழகத்தில் சாலைகள் தோறும் ரத்தக் கரைகள் படிந்து இருப்பதை நாம் என்னவென்று கடந்து செல்வது என்று நமக்கு புரியவில்லை. தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் மட்டும் நடைபெற்ற சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் நமக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி அருகே கடந்த நவம்பர் 24ம் தேதி இரு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்திலே 7 பேர் உயிரிழந்து 70-க்கும் மேற்பட்டோர்கள் காயமடைந்தனர். சிவகங்கை நடந்த சாலை விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் 40 மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, போதை பொருள் நடமாட்டம் இதையெல்லாம் தொடர்ந்து வந்தாலும் தற்பொழுது நாள் தவறாமல் சாலை விபத்துகள் நிகழ்வது மனித உயிர்கள் பலியாவதும் நமக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த உயிரிழப்பு மூலம் அந்த குடும்பத்தினர் அடையும் துயரத்தையும், உயிரிழந்தவர்களை நம்பி குடும்பத்தாரின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறி ஆவதையும் எளிதில் தருவதற்கு உணர வைக்க முடியாது.

இன்றைக்கு கடந்த 11 மாதங்களிலே மட்டும் தமிழகத்தில் நடந்திருக்கும் சாலை விபத்துகளின் பட்டியலை பார்த்தால் நமக்கு தலை சுற்றுகிறது. ராணிப்பேட்டை அருகே கடந்த ஜனவரி 9ம் தேதி கர்நாடகா அரசு பேருந்து மீது இரு லாரிகள் மோதியதிலே 4 பேர் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி அரசு பேருந்து மோதியதில் காரில் வந்த 4 பேர் உயிரிழந்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் மே மாதம் 4ம் தேதி கேரளத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்த வேன் மீது அரசு பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தார். திருத்தணி அருகே மே மாதம் 7ம் தேதி அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தார்கள் 32 பேருக்கு காயம் ஏற்பட்டது. கரூர் மாவட்டத்தில் கடந்த மே 17ஆம் தேதி ஆம்னி பேருந்து சுற்றுலா வேனும் மோதியதில் 4 பேர் உயிரிழந்து 15 பேர்கள் காயமடைந்தனர் இப்படி உயிரிழப்பு தொடர்பு கொண்டே இருக்கிறது.

கிருஷ்ணகிரி, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதியதால் அடுத்தடுத்து பல வாகனங்கள் மோதி 4 பொறியாளர்கள் உயிரிழந்து வாகனங்கள் கடுமையான சேதம் அடைந்தன. இவையெல்லாம் இந்த ஸ்டாலின் திமுக ஆட்சியில் நிகழாண்டு நிகழ்ந்த மோசமான சாலை விபத்தாகும். தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 13.7 சதவீதத்துடன் 7,041 பேர் உயிரிழந்து உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது 10.4 சதவீதத்துடன் 6,258 பேர் உயிரிழந்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் சாலை விபத்து குறித்து முதலமைச்சர் அக்கறை செலுத்தவில்லை. விளம்பரத்திற்கு அக்கறை செலுத்த முதலமைச்சர் 10% மக்கள் உயிரைக் காக்க அக்கறை செலுத்த வேண்டாமா? நேரம் ஒதுக்க வேண்டாமா?

ஸ்டாலின் அவர்களே உங்களின் எதிர்காலம் பற்றி ஆட்சியை பற்றி, தேர்தலிலே ஆட்சியைப் பிடிப்பதை பற்றி, நீங்கள் தொடர்ந்து கட்சிக்காரர்களுக்கு உத்தரவிடுகிறீர்கள் மக்களிடத்திலே வேண்டுகோள் விடுகிறார்கள், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களுடைய உயிர் பறிபோவதை கண்டு உங்களுக்கு பரிதாபம் ஏற்படவில்லையா? கவலைப்படவில்லையா? இப்போதும் நீங்கள் நான்கு மாத கால ஆட்சியில் என்ன செய்யப் போகிறீர்கள்? அடுத்த தேர்தலை மையமாக வைத்து தன் உங்களுடைய கவனம் இருக்கிறது தவிர அடுத்த தலைமுறை காப்பதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?.

நீங்கள் 7ம் தேதி மதுரைக்கு வருகீர்கள் அதற்காக சாலைகளிலே பன்னீரை தெளித்து உங்களை வரவேற்பதற்கு கட்சி தயாராகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகிறது. ஆனால் இந்த மதுரையில் உள்ள சாலைகளில் சாக்கடை தண்ணீர் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மதுரை மக்கள் மீது அக்கறை இருந்தால் விளம்பரத்துக்காக நடத்தப்படும் விழாக்களுக்கு நீங்கள் நேரம் ஒதுக்குறீர்களே ? அதில் ஒரு மணி நேரம் ஒதுக்கி மதுரையில் இருக்கிற சாலைகளை ஆய்வு செய்ய முன் வருவீர்களா? எப்போதும் போல விளம்பர வெளிச்சத்திலே கருப்பு, சிவப்பு கொடியை பறக்க விடுவதற்கு இங்கே ரத்தக்கரைப்படைந்த சாலைகளாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முடிவுரை எழுதுவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

கருப்பு சிவப்பு கொடி பறப்பதுதான் உங்கள் லட்சியம் என்று சொன்னால் ரத்தக்கரை படியும் இந்த சாலைகளின் முடிவு தான் என்ன என்று? மக்களின் கேள்விக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரின் தலைமையிலே மக்களாட்சிக்கு மகுடம் சூட்டப்படும். அப்போது தமிழக சாலைகளிலே மரண ஓலங்களாக ரத்தக்கறை படிந்து தடுத்து வெள்ளை மனம் படைத்த தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக எடப்பாடியார் தீர்வு காண்பார். இன்றைக்கு நீங்கள் அக்கறை உள்ள முதலமைச்சரா? அல்லது விளம்பரம் தேடும் முதலமைச்சரா?என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறினார்.