நன்றி மீண்டும் வராதீர்கள்: முறிந்தது அதிமுக - பாஜக கூட்டணி!
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது
அதிமுக - பாஜக இடையேயான கூட்டணியில் அண்மைக்காலமாக விரிசல் ஏற்பட்ட நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; இன்றைக்கும் இல்லை என்றைக்கும் இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. எனவே, கூட்டணியை பலப்படுத்தவும், புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திலும் பாஜக உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக கூட்டணியில் பாஜக பயணித்து வருகிறது, அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் புறவாசல் வழியாக பாஜக காலூன்ற முயற்சிப்பதாகவும், தேவையில்லாமல் பாஜகவை அதிமுக தூக்கி சுமப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு இந்த குரல்கள் வலுவாக அதிமுகவுக்குள்ளேயே ஒலித்தன. அதிமுக கூட்டணியில் இருந்ததாலேயே பாஜகவால் 4 உறுப்பினர்களை பெற முடிந்ததாகவும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், கூட்டணி வலுவாக இருப்பதாகவே பொதுவெளியில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் இருந்தது.
பேரறிஞர் அண்ணாவை பற்றிய அவரது கருத்துக்கு அதிமுக கடுமையாக எதிர்வினையாற்றியது. கடந்த முறை ஜெயலலிதாவை பற்றி அவர் தெரிவித்த கருத்துகளுக்கு கூட அதிமுகவினர் இதுபோன்று எதிர்விணையாற்றவில்லை. எனவே, மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கேட்பதாலும், டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வருவதில் திட்டவட்டமாக இருப்பதாலும், இதில் எடப்பாடி பழனிசாமிக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால், அண்ணாமலையின் இந்த விமர்சனத்தை தங்களது அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டு அதிமுகவினர் பாஜக எதிர்ப்பை கையில் எடுத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுகவின் இந்த அறிவிப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நன்றி_மீண்டும் வராதீர்கள்! என்ற வாசகத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. #நன்றி_மீண்டும்வராதீர்கள்.” என பதிவிடப்பட்டுள்ளது.