தருமபுரி

தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப யூரியா உரத்தை பெற்றுக் கொள்ளுமாறு என்று வேளாண்மை இணை இயக்குனர் சுசீலா தெரிவித்துள்ளார்.

வேளாண்மை இணை இயக்குனர் சுசீலா நேற்று செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "தருமபுரி மாவட்டத்தில் நெல், கேழ்வரகு, கரும்பு, நிலக் கடலை மற்றும் பருத்தி ஆகிய பயிர்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வளர்ச்சி பருவத்தில் உள்ளன. இந்த பயிர்களுக்கு தேவையான யூரியா உரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள தனியார் உர கடைகளில் இந்த உரத்தின் கையிருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அரூரில் உள்ள 18 உரகடைகளில் ஓரிரு கடைகளை தவிர பிற கடைகளில் போதுமான அளவு உரம் கையிருப்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த உரம் கையிருப்பு இல்லாத உர விற்பனை நிலையங்களில் உடனடியாக கொள்முதல் செய்து இருப்பு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தின் தேவைக்கு ஏற்ப இந்த உரத்தை உடனடியாக வழங்க தர்மபுரி வட்டார மொத்த உர விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மாவட்ட தேவைக்காக 700 டன் உரத்தை வரவழைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரூர் வட்டார 18 கூட்டுறவு சங்கங்களில் தற்சமயம் 130 டன் உரம் கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்களது தேவைக்கேற்ப தனியார் உர கடைகளையோ, கூட்டுறவு சங்கங்களையோ அணுகி தேவையான அளவில் யூரியா உரத்தை பட்டியலுடன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்து இருந்தார்.