Asianet News TamilAsianet News Tamil

வட்டி தள்ளுபடியுடன் கடன் வசதி பெறும் திட்டம்... பயன்பெறுவது எப்படி? வேளாண்மை உழவர் நலத்துறை விளக்கம்!!

வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி தள்ளுபடியுடன் கடன் வசதி  பெறும் திட்டம் தொடர்பாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். 

agriculture and farmers welfare dept explains how to avail loan facility with interest waiver scheme
Author
First Published Nov 23, 2022, 11:26 PM IST

வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி தள்ளுபடியுடன் கடன் வசதி  பெறும் திட்டம் தொடர்பாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேளாண் உட்கட்டமைப்பு நிதித் திட்டம் என்பது ரூ.1.00 இலட்சம் கோடி நிதியுடன், வேளாண் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் வேளாண் தொழில் முனைவோர்௧ளுக்காக செயல்படுத்தப்படும் கடன் உதவித் திட்டமாகும். தமிழ்நாட்டிற்கு வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.5990 கோடி இலக்கிடப்பட்டுள்ளது.  இத்திட்டமானது 2020-21 முதல் 2032-33 வரை செயல்படும். இத்திட்டத்தின் மூலம் விளைபொருட்களின் மதிப்பு கூடுவதோடு, விளைபொருட்கள் வீணாவதை தடுக்க இயலும் என்பதுடன் , விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். 

வட்டி சலுகையுடன் கடன் வசதி:

அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, ஏழு ஆண்டு காலத்திற்கு, ஆண்டிற்கு 3% வட்டி சலுகை  (Interest Subvention) வழங்கப்படுகின்றது. கடன் தொகை அதிகபட்சம் 7 ஆண்டுகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். ரூ.2 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும். ஒரு தகுதிவாய்ந்த நிறுவனம் ஒரு இடத்திலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களிலோ திட்டங்களை செயல்படுத்தினாலும் திட்டங்கள் அனைத்திற்கும் ரூ.2 கோடி வரை கடன் பெற தகுதி பெறும். தனிப்பட்ட விவசாயி, வேளாண் தொழில்முனைவோர் புதிதாக தொழில் துவங்க முன் வரும் நிறுவனத்துக்கு (Start Up) நிதி உதவி அளிக்கப்படும். 25 திட்டங்கள் என்ற வரம்பு, மாநில நிறுவனங்கள், தேசிய மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்பு, உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புக்கு பொருந்தாது. வேளாண் விளைபொருள் விற்பனைக்குழுக்கள் (APMC) தங்களின்  சந்தைப் பகுதிக்குள் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் கடன் பெறலாம்.

தகுதியுள்ள கடன் வழங்கும் நிறுவனங்கள்:

அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் (SCB), பட்டியலிடப்பட்ட கூட்டுறவு வங்கிகள்(Co-Operative Banks), பிராந்திய கிராமப்புற வங்கிகள்(RRBs), சிறு நிதி வங்கிகள் (SFBs), வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்(NBFCs), தேசிய கூட்டுறவு  மேம்பாட்டுக் கழகம் (NCDC), தொடக்க வேளாண் கூட்டுறவு  கடன் சங்கங்கள் இணைப்புடன் மாவட்ட மத்திய கூட்டுறவு  கடன் வங்கியிடமிருந்து கடன் பெறலாம்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்… சிபிஐ அதிரடி நடவடிக்கை!!

அறுவடைக்குப் பின் மேலாண்மைக்கான உட்கட்டமைப்புகளுக்கு கடன் வசதி:

மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு கலன்கள் (Silos), சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன , போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகளுக்கு இத்திட்டத்தின்கீழ் கடன் பெறலாம்.

சமுதாய  வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி:

இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி,  நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன , துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் , அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகள் போன்ற சமுதாய வேளாண் கட்டமைப்புகளை உருவாக்கவும் இத்திட்டத்தின்கீழ்  கடன் உதவி பெறலாம்.
வேளாண் உட்கட்டமைப்பு நிதித் திட்டம்  குறித்த விரிவான தகவல்களையும் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் தொடர்பாகவும் www.agriinfra.dac.gov.in என்ற  இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்... தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!!

இதுவரை வழங்கப்பட்ட கடன்:

இத்திட்டத்தின்கீழ், 2022-23 ஆம் ஆண்டில், இதுவரை 1130 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 707 கடன்களுக்கு ஒப்பளிப்பு வழங்கி ரூ.246.15 கோடி கடன் ஒன்றிய அரசினால் அனுமதிக்கப்பட்டு,  ரூ.144.47 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACCS), உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOps), சுய உதவிக்  குழுக்கள் (SHGs), சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்புகள்,  விவசாயிகள்,  கூட்டுப் பொறுப்புக்  குழுக்கள் (JLGs), கூட்டுறவு விற்பனைச் சங்கம்,  பல்வகை கூட்டுறவு சங்கங்கள்,  வேளாண் தொழில் முனைவோர், புதிதாக தொழில்  துவங்க முன்வரும் நிறுவனங்கள் (Start Ups.), மத்திய / மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு - தனியார் பங்கேற்புடன் கூடிய அமைப்புகள்,  வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்  குழுமங்கள் (APMCs), தேசிய மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள்,  உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு  கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினையும்  ஏற்படுத்தி தருகின்றது. எனவே, வேளாண் உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்ய விரும்பும் அனைவரும் இத்திட்டத்தின் பயனைப்பெற்று தலைசிறந்த தொழில் முனைவோராக முன்னேற, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios