again heavy rainfall in chennai after a small gap
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழை, இன்று காலை முதல் சற்றே நின்று வானம் வெறிச்சிட்டது. சூரியன் எட்டிப் பார்த்த நிலையில், மீண்டும் மேகக்கூட்டங்கள் சேர்ந்து, வானிலை சட்டென்று மாறியது.
சென்னையின் பல இடங்களில் பிற்பகல் 3 மணிக்கு மேல் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், பெரம்பூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதுபோல், ஓட்டேரி, புரசைவாக்கம் பகுதிகளிலும் தற்போது மழை பெய்து வருகிறது.
செங்குன்றம், அயனாவரம், கிண்டி, தி.நகர், கோட்டூர்புரம், கொட்டிவாக்கம், புரசைவாக்கம், சென்ட்ரல், நன்மங்கலம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயபுரம், ஆதம்பாக்கம், செம்பியம், மூலக்கடை, பல்லாவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் இன்று காலையில் இருந்து வெயில் காணப்பட்டு, மழைக்கு ஒரு இடைவௌி விடப்பட்டு இருந்தது. அது முடிந்து மீண்டும் மழை சற்று நேரத்தில் தொடங்கப் போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தென் தமிழகம் மற்றும் தமிழக கடற்கரை முழுவதும் மழைக்கான ஆர்ப்பரிப்புடன் இருக்கிறது.
மேகக்கூட்டங்கள் உருவாகி, சென்னையை நோக்கி தள்ளப்பட்டு இருக்கிறது. காலையில் வெயில் அடித்ததைப் பார்க்கும்போது இன்று மழை வருமா ? என்று சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்போது மாறிவிட்டது.
டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை சிதம்பரம் பகுதியில் காலையில் இருந்தே இடைவிடாது மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை, ராமநாதபுரத்திலும் மழை இன்று இருக்கும்.. என்று அவர் தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
