போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து கடந்த மாதம், போக்குவரதுத ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, தமிழக அரசு சார்பில், போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில்  கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் இன்று  நடைபெற்றது. இதில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது, ஊதியம், ஓய்வூதியப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு, கடந்த 2003 ஏப்ரல் 1ம் தேதிக்கு.பின்னர் வேலையில் சேர்ந்தவர்களுக்கு வருங்கால வைப்புநிதி மற்றும் ஓய்வூதிய பலன்களை உறுதிப்படுத்துவது, போக்குவரத்து கழகங்களுக்கு அரசு நிதி வழங்குவதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகுறித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில், தமிழகம் முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் முழக்க போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் 29ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடைக்கிறது. இது தொடர்பாக, வரும் 25ம் தேதி குரோம்பேட்டையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், மீண்டும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.