எச்.ஐ.வி எதிரொலி.! மீண்டும் பரிசோதனை செய்யப்படும் இரத்தம்! அரசு மருத்துவமனை மும்முரம்..! 

அனைத்து ரத்த வங்கிகளிலும், இருப்பில் வைக்கப்பட்டுள்ள ரத்தத்தை மீண்டும் பரிசோதிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில், அதே ஊரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணிக்கு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு காரணமாக, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்தம் பெற்று செலுத்தப்பட்டது.

இந்த ரத்தம், எய்ட்ஸ் நோயாளி ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் என்பது பின்னர் தெரியவந்தது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகளில், ஆய்வு நடத்த ரத்த வங்கி அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும், மாவட்ட ரத்த வங்கியிலும் இந்த பரிசோதனை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என அரசு மருத்துவர்கள் கூறினர்.