திருவாரூர்
 
திருவாரூரில் கூட்டுறவு சங்க தேர்தலால் ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க. செயலாளரை அரிவாள் வெட்டிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை செயலாளர் கைது செய்யப்பட்டார்.

திருவாருர் மாவட்டம், மன்னார்குடியில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தன. இது தொடர்பாக அ.தி.மு.க.வினருக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. 

இந்த நிலையில் மன்னார்குடி 13-வது வார்டு அ.தி.மு.க. செயலாளார் மதன் (36) நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்குச் செல்வதற்காக பந்தலடி பகுதியில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, அங்குவந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்டத் துணைச் செயலாளர்  வழக்கறிஞர் சரவணசெல்வன், நகரச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ் மற்றும் பலர் மதனை அரிவாளால் வெட்டியுள்ளனர். 

இதில் காயமடைந்த மதனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு உடனே மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் கீழராஜவீதியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக 13-வது வட்ட செயலாளர் பிரகாஷ் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

இதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வாணக்காரத்தெருவில் உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த வினோத் என்பவரின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். 

இதுகுறித்து மதன் கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி காவலாளர்கள் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் சரவணசெல்வனை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய நகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ் உள்ளிட்ட 13 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.