தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வந்தாலே நம்முடைய நினைவுக்கு வரும் எண் 234. தமிழ்நாட்டில் உள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையான இது எப்படி வந்தது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
Secrets Behind 234 Constituency in Tamilnadu : இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952ம் ஆண்டு நடந்தபோது, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது மெட்ராஸ் மாகாணம். அந்த சமயத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் மட்டும் 309 தொகுதிகள் இருந்தன. பின்னர் 1953ம் ஆண்டு ஆந்திரா தனி மாநிலமாக பிரிந்த பிறகு, சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 231 ஆக குறைக்கப்பட்டது. 1956ல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகள் பிரிந்து சென்றதால், தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 206 ஆக குறைந்தன.
தொகுதி மறுவரையறை ஆணையம்
இந்த நிலையில் தான் 1961-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மக்கள் தொகை அடிப்படையில், தொகுதிகளின் எல்லைகளை, மீண்டும் வரையறுக்க வேண்டி இருந்தது. இந்த ஆணையத்துக்கு மொத்தம் இரண்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. அதில் ஒன்று, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவை இடங்களை நிர்ணயிப்பது. மற்றொன்று, சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது. 1961-ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வடமாநிலங்களை விட, குறைவாக இருந்தது.
மக்களவை தொகுதிகள் குறைப்பு
இதனால் தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகள் 41ல் இருந்து 39 ஆக குறைந்தது. அப்போதைய வழக்கத்தின் படி ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு, 5 சட்டமன்ற தொகுதிகள் என்ற கணக்கை பின்பற்ற வேண்டியிருந்தது. இதன்படி பார்த்தால், தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகள் 206-ல் இருந்து 195 ஆக குறைந்துவிடும். இது மக்களாட்சியில் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் செயலாக கருதப்பட்டது. மேலும் தமிழ்நாட்டின் அரசியல் குரலை வலுவிழக்க செய்யும் என அப்போதைய தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும், பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தி நிலவியது.

சிறப்பு சலுகை
195 ஆக தொகுதிகள் குறைந்தால் நிலப்பரப்பு ரீதியாக ஒவ்வொரு தொகுதியும் மிகப்பெரியதாக மாறும் என்றும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கவனிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து நிர்வாக சிக்கல் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த எதிர்ப்புகளையும், மாநில சட்டமன்றங்களின் வலிமை குறைவதையும் கவனித்த தொகுதி மறுவரையரை ஆணையம், தானாகவே முன்வந்து ஒரு தீர்வை யோசித்தது. இந்த ஆணையம் மற்ற மாநிலங்களுக்கு வழங்காத ஒரு சிறப்பு சலுகையை தமிழகத்திற்கு அளித்தது.
மாறிய அரசியல் கணக்கு
அதாவது ஒரு மக்களவை தொகுதிகளுக்கு 5 சட்டமன்ற தொகுதிகள் என்கிற விதியை மாற்றி, தமிழகத்திற்கு மட்டும் 6 சட்டமன்ற தொகுதிகள் என நிர்ணயம் செய்தது. இந்த முடிவின் மூலம் 195 ஆக குறையவிருந்த இடங்கள் 234 ஆக உயர்ந்து, தமிழகத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது. ஆணையம் பெருக்கல் எண்ணிக்கையை மாற்றி இருக்காவிட்டால், இன்று தமிழ்நாட்டில் 195 சட்டமன்ற தொகுதிகள் தான் இருந்திருக்கும். அது கூட்டணி கணக்கையும் மாற்றி இருக்கும். மறுவரையரை ஆணையம் எடுத்த இந்த முடிவு தமிழ்நாட்டின் அரசியல் சூழலையே மாற்றி இருக்கிறது என்றே சொல்லலாம்.


