Asianet News TamilAsianet News Tamil

பன்றியை அறுக்கும் கத்தியால் அதிமுக பிரமுகர் குத்தி கொலை; வயிறு, கைகளில் சரமாரி கத்திகுத்து...

admk person killed Stomach and hands are heavy injury
admk person killed Stomach and hands are heavy injury
Author
First Published Mar 29, 2018, 6:57 AM IST


நாமக்கல்

நாமக்கல்லில், பன்றியை அறுக்கும் கத்தியால் அதிமுக பிரமுகர் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்துள்ள தேவனாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (50). அதிமுக கிளை செயலாளரான இவர் தறிப்பட்டறை நடத்தி வந்ததோடு, வட்டிக்கு பணம் விடும் தொழிலும் ஈடுபட்டு வந்தார். 

இவருக்கு சுமதி (45) என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. 

இந்த நிலையில் குப்புசாமி, தேவனாங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே செம்மக்கல்மேடு என்ற இடத்தில் நேற்று காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தது. அவர்கள் குப்புசாமியை திடீரென வழிமறித்தனர். பின்னர், தங்களிடம் இருந்த பன்றியை அறுக்கும் கத்தியால் குப்புசாமியின் வயிறு, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினர். 

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், வழியிலேயே குப்புசாமி இறந்து போனார்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு ரூரல் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதனையறிந்த அவரது உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

குப்புசாமி எதனால் கொலை செய்யப்பட்டார்? முன்விரோதமா? அல்லது தொழில் போட்டியா? அல்லது வட்டிக்கு விடும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையா? என்று பல்வேறு கோணங்களில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios