முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமாக வேண்டும் என அதிமுக தொண்டர்கள், தொடர்ந்து தீவிர பிரார்த்தனை மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினர், முதலமைச்சரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதையொட்டி, அதிமுக தொண்டர்கள், தங்களது பிரார்த்தனைகளையும், வேண்டுதல்களையும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு பிசியோதெரபி பெண் நிபுணர்களும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர்.

மருத்துவமனையில் சுமார் ஒரு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அதிமுகவினர் தினமும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் தீச்சட்டி ஏந்துவது, அலகு குத்துவது உள்பட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்போலோ மருத்துவமனை முன்பும் ஏராளமான பெண்கள் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகளும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, அப்பல்லோ மருத்துவமனையின் முன்பு அ.தி.மு.க. மகளிர் அணியினர் நேற்று மாவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். நடிகர் குண்டு கல்யாணம் காளி பூஜை நடத்தினார். நெல்லை மாநகராட்சி மேயர் புவனேஸ்வரி திருவாசகம் வாசித்தார்.

இதேபோல், அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிறுபான்மையினர் நலவாரிய தலைவர் பிரகாஷ் உள்பட பாதிரியார்களும், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி ஜெபராஜ், மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது, ‘ஸ்தோத்திர பலிகள்’ என்ற கிறிஸ்தவ பிரார்த்தனை ஆயிரம் முறை சொல்லப்பட்டது. அதே நேரத்தில், சென்னை மாநகரம் முழுவதும் ஆயிரம் பேர், ஆயிரம் முறை இதே பிரார்த்தனையை மேற்கொண்டனர் என்று ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.

மேலும், அ.தி.மு.க. தொண்டர்கள், மலேசிய முருகன், சீரடி சாய்பாபா, விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரு மாதம் முடிகிறது. இவ்வளவு நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.