திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவை என்ஜின் இல்லாத கார் என்றும், அதனை பாஜக என்ற லாரி கட்டி இழுப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

அதிமுக என்பது என்ஜின் இல்லாத கார் என்றும், அதனை பாஜக என்ற லாரி கட்டி இழுக்கிறது என்றும துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பாசிசத்திற்கு எப்போதும் தமிழ்நாட்டில் இடமில்லை" என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

என்ஜின் இல்லாத கார் அதிமுக

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: மதம் பிடித்த யானை பாஜக என்பது நமக்குத் தெரியும். ஆனால், அந்த யானையை அடக்கும் அங்குசம் முதலமைச்சர் கைகளில் உள்ளது. பழைய அடிமைகளுடன் புதிய அடிமைகளை சேர்த்துக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நுழைய முயல்கிறது பாஜக. அவர்களை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார்.

நாம் தமிழக மக்களை நம்பி களத்தில் இருக்கிறோம். என்ஜின் இல்லாத கார் தான் அதிமுக. அதனை கட்டி இழுக்கிறது பாஜக என்னும் லாரி. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர் முதலில் அதிமுகவை காப்பாற்ற வேண்டும்.

நெருப்பாற்றில் நீந்திய இயக்கம்

"பீகாரின் வெற்றிக்குப் பிறகு தமிழகம்தான் தங்கள் இலக்கு என்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா. அவர்களை எதிர்க்க, எங்கள் கருப்பு - சிவப்புப் படை என்றுமே தயாராக இருக்கும். டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்கத்தான் கருப்பு - சிவப்பு கொடி என்றார் அறிஞர் அண்ணா. முதலமைச்சர் கூறியதைப்போல, தமிழ்நாடு என்றுமே தில்லியின் கட்டுப்பாட்டில் இருந்து 'அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான்'.

"மிசா என்னும் நெருப்பாற்றில் நீந்திய இயக்கம் இது. தமிழுக்காகத் தண்டவாளத்தில் தலை வைத்த இயக்கம். இப்படிப் பல பெருமைகளை உடைய இயக்கத்தை நீக்கிவிட்டு, தமிழகத்தை குஜராத்தில் இருந்து கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தால், அது நடக்காது! மற்ற மாநிலங்களில் நுழைந்ததைப் போல தமிழ்நாட்டில் நுழைய முடியாது. திமுக இளைஞரணி இருக்கும் வரை தமிழ்நாட்டில் அது நடக்காது.

பாசிசத்திற்கு எதிரான போர்

அடிமையாக இருந்து சுகமாக வாழ்வதை விட, சுயமரியாதையுடன் சுதந்திரமாக வாழ்வதே மேலானது. திமுகவைச் சிலர் மிரட்டிப் பார்க்கின்றனர். அடுத்து எங்கள் இலக்கு தமிழ்நாடு என்கிறார்கள். பாசிசத்திற்கு எதிரான போரில் களத்தில் நின்று வெற்றி பெற வேண்டும். அதற்கு இளைஞரணி வலுவைச் சேர்க்க வேண்டும்.

அடுத்த 100 நாள்கள் களத்தில் இருந்து உழைக்கத் தயார் என நான் உறுதி கூறுகிறேன். முதலமைச்சரிடம், நடக்க இருக்கும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்க வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் 200 தொகுதிகளில் கட்டாயம் வெல்வோம்.” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.