ஜெயலலிதா இல்லாத பொதுக்குழு கூட்டம்… புதிய பொதுச் செயலாளராக சசிகலா இன்று தேர்ந்தெடுக்கப்படுவாரா?

அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி காலமானார். அவரது மரணம் அதிமுக மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அதிமுக வின் பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும்.

இதையொட்டி அ.தி.மு.க. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

அதிமுக பொதுச்செயரலாளர் பொறுப்புக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரவேண்டும் என்று கட்சியின் மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

மாவட்ட அளவில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி சசிகலா கழகத்தின் பொதுச் செயலாளராக வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அமைச்சர்கள், கட்சியின் தலைமை நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளிட்டோர் போயஸ் கார்டன் சென்று சசிகலாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்

அதே நேரத்தில் அதிமுக தலைமை ஏற்க வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் ஜெவின் அண்ணன் மகள் தீபாவை வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளது இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், சசிகலாவை பொதுச் செயலாளராக்கும் தீர்மானமும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

ஜெயலலிதா இல்லாததால் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்கள் யாருக்கும் அழைக்கப்படவில்லை. ஜெயலலிதா இல்லாத ஒரு பொதுக்குழுவை அதிமுக சந்திக்கிறது.