குடியாத்தத்தில் போலி பட்டா தயாரித்து ரூ. 4.75 இலட்சம் மோசடி செய்த அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம் அசோக் நகரைச் சேர்ந்தவர் கே.ஆர்.கம்பன் (எ) ஸ்டேன்லி (35). அதிமுகவைச் சேர்ந்த இவர் 15-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக உள்ளார்.
கே.வி. குப்பத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ பாதிரியார் மரியதாஸ் (43). கடந்த ஆண்டு குடியாத்தம் காந்தி நகரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள நிலத்தில் அரசு பட்டா வழங்க உள்ளதாகவும், தனக்கு அதிகாரிகள் தெரியும் என்பதால் பணம் கொடுத்தால் பட்டா வாங்கித் தருவதாகவும் மரியதாஸிடம் ஸ்டேன்லி கூறியுள்ளார்.
இதனையடுத்து ஸ்டேன்லி, மரியதாஸிடம் இருந்து ரூ. 4.75 இலட்சத்தை சில தவணைகளில் பெற்றுள்ளார். அவருக்கு போலியாக ஒரு பட்டாவை ஸ்டேன்லி தயாரித்தும் தந்துள்ளார்.
இதையடுத்து பட்டாவை அதிகாரிகளிடம் மரியதாஸ் காட்டியபோது அது போலி எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டது குறித்து நகர காவல் நிலையத்தில் மரியதாஸ் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஜி.மதியரசன், ஸ்டேன்லியை கைது செய்தார்.
