விஜயதசமி விழா கோவில்களிலும், பள்ளிகளிலும் வித்யாரம்பம்.! நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதிய குழந்தைகள்
நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் வித்யாரம்பம் நடைபெற்றது. ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுக்கு நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் கல்வியை தொடங்கினர்.
விஜயதசமி விழா
நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. விஜயதசமிக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அகில உலகையும் ஆட்டி படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை.
கோயில்களில் சிறப்பு வழிபாடு
அந்த வகையில், குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு போட்டி அளிக்கும் வகையில் அரசு பள்ளிகளிலும் விஜயதசமி தினத்தில் மாணவர்கள் சேர்க்கையானது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இதனையொட்டி மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை.
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை
இதனையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் குழந்தைகளுக்கு பச்சரிசியில் அச்சரம் எழுதிப் பழக்கினர்.
இதையும் படியுங்கள்
உச்சத்தை தொடும் வெங்காயம், இஞ்சி விலை...! கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் என்ன.?