சர்ப்ரைஸ் செய்தி.. தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு போன உத்தரவு.. குஷியில் பொதுமக்கள்..!
பத்திரப்பதிவுக்காக சாதாரண நாட்களில் 100 முன்பதிவு டோக்கன்களும், 12 தட்கல் டோக்கன்களும் வழங்கப்படும். விசேஷ நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவு நடப்பதால் அந்த நாட்களில் கூடுதலாக முன்பதிவு டோக்கன் வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 18ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலங்களிலும் கூடுதலாக பதிவு டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சார் பதிவாளர் அலுவலகங்களில் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து ஆவணங்களை பதிவு செய்தல், நிறுவனங்கள், திருமணங்கள் பதிவு செய்தல் போன்ற சேவை வழங்கப்படுகிறது. பத்திரப்பதிவுக்காக சாதாரண நாட்களில் 100 முன்பதிவு டோக்கன்களும், 12 தட்கல் டோக்கன்களும் வழங்கப்படும். விசேஷ நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவு நடப்பதால் அந்த நாட்களில் கூடுதலாக முன்பதிவு டோக்கன் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி முகூர்த்த நாள் என்பதால் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் மார்கழி மாதம் தொடங்கியதால் முகூர்த்த தினங்கள் ஏதும் வரவில்லை. தை விசேஷமாக கருதப்படுவதால் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும்.
இதன் காரணமாக பொங்கலை ஒட்டிய விடுமுறை நாட்கள் முடிந்து அடுத்த வேலை நாளான ஜனவரி 18ம் தேதி முதல் 31ம் தேதி வரை வேலை நாட்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தைப்பொங்கலை (15.1.2024) அடுத்து வரும் நாட்களில் அதிக அளவில் ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் பொங்கலை ஒட்டிய விடுமுறை நாட்கள் முடிந்து அடுத்த வேலை நாளான 18.01.2024 முதல் 31.01.2024 வரையிலான காலத்தில் வரும் அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும். மேலும் தற்போது வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.