நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு - ஆயுள் தண்டனை கைதி விடுதலை..!
நடிகை ராணி பத்மினி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுவந்த கைதியை விடுதலை செய்யப்பட்டார். 18 ஆண்டுகளாக சிறையில் உள்ள ராணி பத்மினியின் காவலாளி லட்சுமி நரசிம்மனை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் தனது தாய் இந்திரா குமாரியுடன் வசித்து வந்தவர் நடிகை ராணி பத்மினி.
இவர் 1980 களில் தமிழ் மற்றும் மலையாள் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் பட்டம் பதவி, கனவுகள் கற்பனைகள், நிரபராதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 1986 ஆம் ஆண்டு ராணி பத்மினியின் டிரைவர் ஜெபராஜ், காவலாளி லட்சிமி நரசிம்மன், சமையல்காரர் கணேசன் ஆகிய மூன்று பேரும் இணைந்து தாய் இந்திராகுமாரியையும் ராணி பத்மினியையும் கொலை செய்தனர்.
இதுகுறித்த வழக்கில் 1987 ஆம் ஆண்டு செங்கல்பட்டு நீதிமன்றம் மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இதனிடையே ஜெபராஜ் சிறையிலேயே மரணமடைந்தார். கணேசன் தப்பியோடிவிட்டார். இந்நிலையில், குற்றவாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்யக்கோரி அவரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இதையடுத்து அவரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.