actor vijay antony gives clean chit to madurai cinema financier anbu cheziyan
கந்துவட்டி கொடூரர் என்று மதுரை அன்புச் செழியனை சினிமா உலகமே ஒற்றை விரல் காட்டி சுட்டிக் காட்டும்போது, இயக்குனர் சீனு ராமசாமியத் தொடர்ந்து, இப்போது விஜய் ஆண்டனியும் அவருக்கு ஆதரவாக கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் சுப்பிரமணியபுரம் புகழ் சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் அவர் கந்துவட்டிக்கு பணம் வாங்கியதும், மிரட்டல் காரணத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, திரையுலகினர் பலரும் அசோக்குமாருக்கு ஆதரவாகவும், கந்து வட்டி அன்புச் செழியனுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந் நிலையில் திடீரென இயக்குநர் சீனு ராமசாமி, அன்புச்செழியனுக்கு ஆதரவாக, அவர் உத்தமர் என்ற ரீதியில் தனது டுவிட்டர் பதிவில், ‛எம்.ஜி.ஆர்., சிவாஜி போல் இன்றைய நடிகர்கள் இல்லை. அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன்' எனக் கூறியிருந்தார்.
இந்தக் கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது கருத்தைத் தொடர்ந்து, “6 வருடமாக அன்புச்செழியனிடம் பணம் பெற்றுத்தான் படம் எடுத்து வருகிறேன். என்னிடம் அவர் முறையாகத்தான் நடந்துகொள்கிறார். அன்புச்செழியனை அனைவரும் மிகைப்படுத்தி சித்தரிப்பதாகத் தோன்றுகிறது ” என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியும் தன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
