Actor Karthi Salute

ராஜஸ்தானில், கொள்ளையர்களால் சுட்டு வீரமரணமரடைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு, நடிகர் கார்த்தி வீர வணக்கம் செலுத்தி டுவிட் செய்துள்ளார்.

சென்னை, கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ், சௌத்ரி ஆகியோர் பாலி மாவட்டம் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர்
காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடன் சென்ற போலீஸாரும் காயம் அடைந்தனர்.

பெரியபாண்டியின் உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த பெரியபாண்டியனின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், உள்துறை செயலாளர், முன்னாள் மற்றும் தற்போதைய காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

இதேபோன்ற ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது.

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த கார்த்திக், வீரமரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு வீர வணக்கம் செலுத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கனத்த இதயத்துடன் உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும் சல்யூட் என்று நடிகர் கார்த்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.