ரசிகர்கள் வாக்காளர்களாக மாற மாட்டார்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசிய நிலையில், அவர் தவெக தலைவர் நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கியதாக தகவல் பரவி வருகிறது.

மக்கள் நீதி மய்யம் ஆண்டு விழா 

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். சினிமாவில் நடிப்பதை முழு நேர தொழிலாக கொண்டுள்ள கமல்ஹாசன் அவ்வப்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு கைமாறாக திமுக அவருக்கு ராஜ்யசபா எம்பி ஆக்க இருக்கிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. அப்போது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன், ''இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும். அடுத்த ஆண்டு சட்டப்பேரவையில் நமது குரல் ஒலிக்கும். அதற்கேற்ற வகையில் இந்த விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாம் இந்த விழாவை கொண்டாடிக் கொண்டே இருக்கலாம். மக்கள் நீதி மய்யத்தில் மாணவர்கள் பலரும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் நாளை நமதே என்பதன் அர்த்தம் நமக்கு புரியும். 

ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு

நான் ஏதாவது பேசினால் தோற்றுப்போன அரசியல்வாதி என விமர்சனம் செய்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படி வரத் தவறியதை என்னுடைய தோல்வியாக பார்க்கிறேன். நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருந்தால் நான் பேசும் பேச்சும், இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் என்பது வேறு என்பதை என்பதை எனது அனுபவத்தில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். கடைசி ஒரு வாக்காளர் இருக்கும் வரை நமது பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்'' என்றார்.

தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுத்தது குறித்து பேசிய கமல்ஹாசன், ''எந்த மொழி வேண்டும்; எந்த மொழி வேண்டாம் என்று தமிழனுக்கு தெரியும். தன்னம்பிக்கையுடன் நாம் உயிர்த்திருக்க தமிழக மக்களே காரணம் ஆகும். நிதி தராத மத்திய அரசு என்பதை, நாளைய வரலாறு சொல்லும். மொழிக்காக உயிர் விட்டவர்கள் தமிழர்கள். காந்தியைப் போன்று பெரியாரையும் எனக்கு பிடிக்கும். பெரியாரே காந்தியின் சிஷ்யன் தான்'' என்றார்.

விஜய்யை தாக்கினாரா?

நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில் உரையாற்றியதால் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளையில் 'ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் என்பது வேறு' என்று பேசிய கமல்ஹாசன் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளதாக சமூகவலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

''கமல்ஹாசன் தனது அனுபவத்தின் மூலம் சரியாக சொல்லி இருக்கிறார். தவெக தலைவர் விஜய் இதை புரிந்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் என்றுமே வாக்களார்களாக மாற மாட்டார்கள்'' என்று திமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் தெரிவித்து வருகின்றனர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் தவெக கட்சியினர் மற்றும் விஜய் ரசிகர்கள், ''ஒரு தலைவர் தங்களுக்கு நல்லது செய்வார் என மக்கள் நினைத்தால் அவரது ரசிகராக மட்டுமின்றி வாக்காளர்களாகவும் மாறுவார்கள். இதற்கு எம்.ஜி.ஆர் நல்ல உதாரணம். ஏன் கேப்டன் விஜயகாந்த் கூட மக்கள் ஆதரவை பெறவில்லையா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.