தேனி

ஆடிப்பெருக்கு தினத்தன்று குலதெய்வ கோவிலில் நடிகர் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தார் சாமி தரிசனம் செய்து, கிடாய் வெட்டி நடத்திய அன்னதானத்தில் ஊர் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே முத்துரெங்காபுரம் கிராமத்தில் நடிகர் தனுஷின் குல தெய்வமான கஸ்தூரி அங்கம்மாள் கோவில் உள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த கோவிலுக்கு தனுஷ் வந்தார். அவருடைய மனைவி ஐஸ்வர்யா, தந்தை கஸ்தூரிராஜா, தாயார் விஜயலட்சுமி ஆகியோரும் அவருடன் வந்திருந்தனர்.

பின்னர், அவர்கள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். தீபாராதனை காட்டப்பட்டு தேங்காய், பழம் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் தனுஷ் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது.

தனுஷ் சார்பில், கோவில் வளாகத்தில் மூன்று கிடாய்கள் பலியிடப்பட்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மக்களுடன் தனுஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உணவு சாப்பிட்டனர்.

பின்னர் அவர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கேரவன் பேருந்தில் உட்கார்ந்தனர். நெருங்கிய உறவினர்களும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். பின்னர் தங்களது கார்களில் ஏறி தேனி நோக்கி தனுஷ் குடும்பத்தினர் சென்றனர்.