நடிகர் ஆர்யா கலந்து கொள்ளும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும், தமிழ்க்கலாச்சாரத்தை சீரழிப்பதாக உள்ளதாகவும் கூறி துர்கா மாதர் சங்க பெண்கள் போராட்டம் நடத்தினர்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ஆர்யா, தனக்கு மணப்பெண் தேடுவதாக நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 பெண்கள் பங்கேற்று உள்ளனர். இவர்களில் ஒருவரை ஆர்யா தனது மணப்பெண்ணாக தேர்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியின்போது, நடிகர் ஆர்யா, 16 பெண்களிடம் ஆடிப்பாடியும், அவர்கள் சமைத்ததை சாப்பிட்டும் ஜாலியாக பொழுதைக் கழித்து வருகிறார். ஆர்யாவை திருமணம் செய்து கொள்வதற்காக போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றனர். 

மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களிடம், நீங்கள் யாருக்காவது உதட்டோடு முத்தம் கொடுத்திருக்கிறீர்களா? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விக்கு ஆர்யா உட்பட போட்டியில் கலந்து பெண்கள் அனைவருமே ஆம் என்று கூறினர். 

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து பல பெண்கள் வெளியேற்றப்பட்டனர். ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை கொடுக்க முன் வந்திருக்கும் ஆர்யா, 15 பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறாரே என்ற எண்ணம் நிகழ்ச்சி பார்ப்பவர்கள் மனதில் எழாமல் இல்லை.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் குடவாசலில் படப்பிடிப்பிற்காக நேற்று நடிகர் ஆர்யா கும்பகோணம் கல்லூரி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். ஓட்டலில் ஆர்யா தங்கியிருப்பதை அறிந்த கும்பகோணம் துர்கா மாதர் சங்கத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள், முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

அப்போது அவர்கள், ஆர்யா பங்குபெறும் நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், தமிழக கலாச்சாரத்தை சீரழிப்பதாக உள்ளது என்றும் எனவே அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர்.