கரூர்

மாநில அரசின் எட்டாவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு முன்னர் உடனடியாக 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநில அரசின் எட்டாவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு முன்னர் உடனடியாக 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்,

1.4.2003–க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் அறிக்கையினைப் பெற்று, அனைத்துப் பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர அறிவிப்பினை வெளியிட வேண்டும்,

கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகிகளை அழைத்துப் பேச வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அறிவித்து இருந்தது.

அதன்படி கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை கரூர் மாவட்ட ஜாக்டோ மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பொன்.செல்வராஜ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில மூத்தோர் அணி அமைப்பாளர் இருதயராஜன், நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கருணாகரன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் வேலுமணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.