Asianet News TamilAsianet News Tamil

பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவராண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்…

action will-be-taken-to-provide-adequate-relief-to-the
Author
First Published Jan 9, 2017, 8:36 AM IST


ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவராண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா கூறினார்.

வடகிழக்கு மற்றும் தென்மேற்கு ஆகிய பருவமழைகள் பொய்த்ததால் தமிழகம் முழுவதும் இந்த வருடம் கடும் வறட்சி. இந்த வறட்சியால் முதன்மையாகவும், முற்றிலுமாகவும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியால் குன்னூர் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.

வனப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகிற அவலம் தொடர்ந்து நீடிக்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டல் குடிநீர் அதிகவிலைக்கு விற்கபடுகிறது. வேறு வழியின்றி, பலர் அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும், தேயிலைச் செடிகளும் கருகு வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, தோட்டக்கலைத்துறை இயக்குனர் அர்ச்சனா பட்நாயக், ஆட்சியர் சங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று நீலகிரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

இந்த குழுவினர் பாரஸ்ட்கேட், கவரட்டி, கீழ்கவரட்டி, எம்.பாலாடா, கப்பத்தொரை உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

ஆய்விற்கு பின்னர் அமைச்சர் சரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“பருவமழை பொய்த்த நிலையில் வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு விவசாயிகளின் கோரிக்கைகளை நேரிடையாக கேட்டறிந்துள்ளோம். பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவராண நிதி வழங்க இந்த குழு நடவடிக்கை எடுக்கும். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிகின்றனர்.

உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி ஆகிய பயிர்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் உருளைக்கிழங்கு ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், கேரட் 500 ஏக்கர் அளவிலும், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்கள் 200 ஏக்கர் அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,920 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 927 மில்லி மீட்டர் அளவிற்கு மட்டுமே மழை பெய்துள்ளது. 52 சதவீதம் அளவிற்கு மழை குறைந்ததால் நீலகிரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேயிலை விவசாயிகள் மழையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

முதற்கட்டமாக காய்கறி பயிர்கள் பயிரிட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பழங்குடியினர் வாழும் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே அவர்களுக்கு தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சில விவசாயிகள் தங்களுக்கு அனுபோக சான்றிதழ், சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை உடனடியாக வழங்குவதோடு, கடன் உதவியும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கர பாண்டியன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் மணி, துணை இயக்குனர் உமாராணி, உதவி இயக்குனர் மீராபாய் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios