Action against 43 companies employed in the Republic Day

சிவகங்கை

சிவகங்கையில் குடியரசு நாளில் விடுமுறை அளிக்காமல் பணியாளர்களை வேலை செய்ய வைத்த 43 நிறுவனங்கள் மீது தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு நாளன்று முன் அனுமதியின்றி தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டது தொடர்பாக சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மைவிழிசெல்வி தலைமையில், சிவகங்கை தொழிலாளர் துணை ஆய்வாளர் மலர்விழி, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சேதுராஜ், சந்திரசேகரன், சேதுபதி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் நடந்த இந்த திடீர் ஆய்வின்போது, முன்னறிவிப்பின்றி குடியரசு நாளில் விடுமுறை வழங்காமல் பணியாளர்களை வேலை செய்ய அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, விடுமுறை நாளில் தொழிலாளர்களை வேலை செய்ய வைத்த 18 கடைகள், 22 உணவு நிறுவனங்கள் மற்றும் 3 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 43 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த 43 நிறுவனங்கள் மீதும் தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.