மக்கள் தொகைக்கு ஏற்ப துப்புரவுப் பணியாளர்களை நிரப்ப வலியுறுத்தி, அறந்தாங்கி நகராட்சி முன் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஏஐடியுசி அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் அ. பெரியசாமி தலைமை வகித்தார்.

மக்கள் தொகைகேற்ப நிர்ணயிக்கப்பட்டபடி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சிற்றூராட்சிகளில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும், உள்ளாட்சி பணிகளில் ஒப்பந்தக் கூலி, வெளி ஆதாரம் (அவுட் ஸ்சோர்சிங்) சுய உதவிக்குழு என்ற பெயர்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், உள்ளாட்சித் துறை துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 18 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டச் செயலர் வி.எஸ். கனகராஜன் தொடக்கவுரை ஆற்றினார், மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.எல்.இராமச்சந்திரன் நிறைவுரை ஆற்றினார், மாவட்டத் தலைவர் ஆர்.முருகானந்தம், துணைச் செயலாளர் ஆர். சொர்ணக்குமார், பொருளாளர் க. செல்வராஜ், சட்ட ஆலோசகர் எஸ்.பி. லோகநாதன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினார்.