accident government bus fallen 150 foot dungeon 8 died 30 heavy injured ...
நீலகிரி
உதகை மலைப் பாதையில் 150 அடி பள்ளத்தில் பல்டி அடித்தபடி அரசு பேருந்து உருண்டதில் 8 பேர் பரிதாபமாக பலியாயினர். 30 பேர் பலத்த காயத்தோடு தீவிர சிசிக்கை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவதும், மண் சரிவதும் வாடிக்கையாக உள்ளது. இது தவிர சாலைகளில் தண்ணீர் தேங்கி அடிக்கடி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதன்படி, நேற்றும் காலை முதலே பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று பகல் 11.15 மணிக்கு ஊட்டியில் இருந்து குன்னூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அதில் சுமார் 36 பயணிகள் இருந்தனர். பேருந்தை ஊட்டி மணியட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜ்குமார் (38) என்பவர் ஓட்டினார். ஊட்டி அருகே உள்ள குருத்துக்குழியை சேர்ந்த பிரகாஷ் (42) என்பவர் நடத்துநராக இருந்தார்.
அந்த பேருந்து 11.30 மணிக்கு மந்தாடா அருகே மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்தது. அந்தச் சாலையில் சிறிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. அதில் பேருந்து இறங்கிவிடாமல் இருக்க ஓட்டுநர் சாலையின் வலதுபுறமாக பேருந்தை திருப்பினார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த 150 அடி பள்ளத்தில் விழுந்து தலைகுப்புற கவிழ்ந்தது. மரங்கள் ஏதும் இல்லாததால் பேருந்து நிற்காமல் பலமுறை பல்டி அடித்தபடி மலைச்சரிவில் உருண்டது. இதனால் பேருந்துக்குள் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து அலறினர்.
பேருந்து பலமுறை உருண்டதால் அதன்பாகங்கள் உடைந்து நொறுங்கி கழன்று விழுந்தன. அப்போது பேருந்திதில் இருந்த சில பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். ஆனாலும் பேருந்து நிற்காமல் உருண்டு அங்குள்ள விளைநிலத்தில் விழுந்தது.
150 அடி பள்ளத்தில் உருண்டதால் பேருந்தின் மேற்கூரை தனியாக கழன்று விழுந்தது. இருக்கைகள் உள்ளிட்ட பாகங்கள் சுக்கு நூறானது. மொத்தத்தில் பேருந்தே நொறுங்கி உருக்குலைந்தது.
இதனால் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். சிலர் லேசான காயங்களு டன் உயிர் தப்பினர். சில பயணிகள் கை கால்களை இழந்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த படி கிடந்தனர்.
இதனை அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் சென்ற இளைஞர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பேருந்து உருண்டு விழுந்து கிடந்த பகுதியை நோக்கி இறங்கினர். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல் சென்ற இளைஞர்கள், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பலரை மீட்டு தூக்கி கொண்டு வந்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் 10-க்கும் மேற்பட்ட அவசர ஊர்திகளில் ஏற்றப்பட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். ஆனால், செல்லும் வழியில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் ஊட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஓட்டுநர் ராஜ்குமார், நடத்துநர் பிரகாஷ் உள்பட 22 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார். சிகிச்சை பலனின்றி மூர்த்தி (47) என்பவரும் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது.
விபத்தில் இறந்த 8 பேரின் பெயர் மற்றும் விவரங்கள்:
சாந்தகுமாரி (55), அரசு பூங்கா, ஊட்டி,
தருமன் (64), வேலிதளா, ஊட்டி,
தினேஷ் (30), குன்னூர்,
நந்தகுமார் (36), நொண்டிமேடு, ஊட்டி,
பிரபாகரன் (50),
ஜெயஸ்ரீ (45), பெங்களூரு,
அல்மாஸ் (28), குன்னூர்
மூர்த்தி (47)
இதற்கிடையில் விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் நேரில் சென்று மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜகோபால் தலைமையில் கேத்தி பேரூராட்சி பணியாளர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து கேத்தி காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
