Acaivarttai multi crore fraud committed by the financial institution to the farmers

கடத்தூர்

கோபி அருகே விவசாயிகளுக்கு கடன் தருகிறோம் என்று ஆசைவார்த்தை காட்டி, பல கோடி ரூபாய் மோசடி செய்த போலி நிதி நிறுவனத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு “ஈரோடு மாவட்ட தென்னை உற்பத்தியாளர்கள் ஒன்றியம்” என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனம் நடத்தியவர்கள் விவசாயிகளுக்கு வீட்டுக்கடன், பயிர்க்கடன், ஆழ்துளை கிணறு அமைக்க கடன், இடம் வாங்குவதற்கு மானியத்துடன் கடன் தருவதாக அறிவித்து இருந்தனர்.

இதனையடுத்து கோபி, ஈரோடு, சத்தியமங்கலம், சேலம் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து 4000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

இதற்காக உறுப்பினர்களிடம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து பலகோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் மீது சில விவசாயிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டததைத் தொடர்ந்துவிவசாயிகள் மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து அவருடைய உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் உதவி வேளாண்மை இயக்குனர் பழனிச்சாமி, துணை தாசில்தார் உத்தரசாமி மற்றும் கடத்தூர் காவல் ஆய்வாளர் அக்பர்கான் ஆகியோர் அந்த நிறுவனத்துக்குச் சென்று நேற்று மாலை சோதனை நடத்தினர்.

சுமார் 45 நிமிடம் நடந்த இந்த சோதனை குறித்து அதிகாரிகள் கூறியது:

“தனியார் நிறுவனத்திடம் இருந்து போலியான பாஸ்புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்ப், அரசு பணிக்கு மட்டும் என்று சீல் வைக்கப்பட்ட கவர்கள், ரசீது புத்தகங்கள், விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

இதுதொடர்பாக அங்கு பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினோம். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை துறை ரீதியாக ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வின் முடிவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

மேலும் இதுசம்பந்தமாக அந்த நிறுவனத்தினுடைய நிர்வாகிகளை கடத்தூர் காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ‘இந்த நிறுவனத்தினுடைய நிர்வாகிகள் எங்களை நேரில் சந்தித்து 50 சதவீத மானியத்துடன் கடன் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை காட்டினர். இதற்காக விவசாய நிலத்தின் பத்திர நகல், சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அதிகாரியின் சான்று, வரைபடம், சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, வில்லங்கச்சான்று ஆகியவற்றை எங்களிடம் இருந்து பெற்றனர்.

அதை நம்பி நாங்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலுத்தினோம். போலியான ஆவணங்கள் அந்த நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதன் மூலம் நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். அதிகாரிகள் சோதனை நடத்தியதன் மூலம் அது போலி நிறுவனம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் பணமோசடி நடந்துள்ளது. எனவே, போலிநிறுவனத்தை நடத்தியவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்றுத் தெரிவித்தனர்.