TVK Aadhav Arjuna wife Daisy: த.வெ.க. தேர்தல் பிரிவு தலைவர் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் முடிவுகள் தனிப்பட்டவை என மனைவி டெய்ஸி அறிக்கை வெளியிட்டுள்ளார். தொழில், அரசியல் சார்ந்த முடிவுகள் அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும், குடும்பத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் விஜயின் த.வெ.க. தேர்தல் பிரிவு தலைவர் ஆதவ் அர்ஜுனா எடுக்கும் அரசியல் முடிவுகள் அவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தவை என அவரது மனைவி டெய்ஸி கூறியுள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நடவடிக்கைகளைக் குடும்பத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனாவின் மனைவியும் பிரபல லாட்டரி மார்ட்டின் நிறுவனத் தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகளுமான டெய்சி இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

டெய்சி, நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து தொழில் மற்றும் அரசியல் சார்ந்த முடிவுகளும் நிலைப்பாடுகளும் அவரவரின் தனிப்பட்ட தீர்மானங்கள். மேலும் அவை எங்கள் குடும்பத்துடன் எந்த தொடர்பும் கொண்டவை அல்ல.

View post on Instagram

தனிப்பட்ட கருத்துகளை மதிக்கிறோம்:

எங்கள் வாழ்க்கை குறித்து பரப்பப்படும் அனைத்து தவறான தகவல்கள், ஊகங்கள், வதந்திகள் ஆகியவற்றுக்கு முடிவுகட்டுவதற்காகவே இந்த அறிவிப்பு. நாங்கள் இருவரும் தனித்துவமான பணி வாழ்க்கையையும் தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளோம். ஒருவருக்கொருவர் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட கருத்துக்களை மதிக்கிறோம். இதற்கு மாறாக எந்தவொரு தவறான கூற்றுக்களையும் நாங்கள் எதிர்க்கிறோம்.

எங்கள் இருவரின் நலனுக்காக, தொழில் மற்றும் பொது வாழ்க்கை விவகாரங்களை குடும்பத்துடன் தொடர்புபடுத்தி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என எங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்."

இவ்வாறு ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெஸ்சி கூறியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனாவின் மாமனார்:

ஆதவ் அர்ஜுனாவின் மாமனார் சாண்டியாகோ மார்ட்டின் பாஜக, திமுக இரண்டுக்கும் நன்கொடை அளித்துள்ளார். தனது மார்ட்டின் குழும நிறுவனங்கள் மூலம் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி வரை ரூ.1,368 கோடி நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கியுள்ளார். அதில் ரூ.509 கோடி திமுகவுக்கும் ரூ.100 கோடி பாஜகவுக்கும் கொடுத்திருக்கிறார்.

தொழிலதிபர் என்ற முறையில் எல்லா அரசியல் கட்சிகளிலும் மார்ட்டினுக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மருமகன் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் செயல்பாடுகள் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனப் பேசப்படுகிறது.