abolish the convertion of Cuddalore into chemical petroleum sector - farmers decision

கடலூர்

கடலூர் மாவட்டத்தை பெட்ரோலிய இரசாயன மண்டலமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று புவனகிரியில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட மாநாடு புவனகிரியில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் மாதவன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு மூத்த உறுப்பினர் வரதராஜன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.

மாநாட்டில், சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவராக ரவிச்சந்திரன், செயலாளராக மாதவன், பொருளாளராக தட்சிணாமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மாநிலச் செயலாளர் சுந்தரமூர்த்தி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் காமராஜ், மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், நிதிநிலை அறிக்கைப் பொருளாளர் தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர் கற்பனை செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் கருப்பையன், ராதா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாயகி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வரவேற்புக் குழுச் செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கோபாலகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசினார்.

இதில், “கடலூர் மாவட்டத்தை பெட்ரோலிய இரசாயன மண்டலமாக மாற்றும் முயற்சி கைவிட வேண்டும்,

பரங்கிப்பேட்டை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளை முற்றிலும் அகற்ற வேண்டும்,

கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்” உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து சங்கத்தின் சார்பில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.