Asianet News TamilAsianet News Tamil

யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது! விஷாலுக்கு பஞ்ச் வைத்த அபிராமி ராமநாதன்!

Abirami Ramanathan question for Vishal
Abirami Ramanathan question for Vishal
Author
First Published Oct 14, 2017, 1:24 PM IST


தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக குறைகள் இருந்தாலும் நாங்கள் அதை பகிரங்கமாக பேசவில்லை என்றும் யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது என்று அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

திரையரங்குகளில், பார்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் கேண்டினில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியிருந்தார்.

மேலும், பொதுமக்கள் தண்ணீர் கொண்டு செல்ல திரையரங்குகள் அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் அம்மா தண்ணீர் பாட்டில்களும் உள்ளே விற்கப்பட வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க தேவையில்லை என்று நேற்று கூறியிருந்தார்.

மேலும், திரையரங்குகளில் பார்கிங் கட்டணம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது; எனவே அது பற்றி பேச முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். திரையரங்கில், எம்.ஆர்.பி. விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், அபிராமி ராமநாதன் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், திரையரங்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

திரையரங்கு உரிமையாளர்களுடன் விஷால் கலந்தாலோசித்த பிறகு அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று கூறினார். திரையரங்கு உரிமையாளர் சங்கம் என ஒன்று இருப்பதையே அவர் மறந்து விட்டாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தியேட்டர்களில் நியாயமற்ற வகையில் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்றும் கடந்த ஒரு மாத காலமாக உரிய விலையில்தான் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுக்கு அனைவரும் பொறுப்பாக முடியாது என்றும் அவர் கூறினார். 

எந்த திரையரங்கிலும் சென்னையில் ரூ.150 பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் இணையதள பதிவு கட்டணத்தைப் பொறுத்தவரை அனைத்தையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அம்மா தண்ணீர் பாட்டிலை அரசு வழங்கினால் தியேட்டர்களில் விற்க தயார் என்றார்.

தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக குறைகள் இருந்தாலும் நாங்கள் பகிரங்கமாக பேசவில்லை என்றும் யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது என்றும் அபிராமி ராமநாதன் காட்டமாக தெரிவித்தார். திரையரங்குகள், திரைப்படத்தை வெளியிடுவது பொன் முட்டையிடும் வாத்து போன்றது என்றும் அபிராமி ராமநாதன் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios